பாட்னா: உள்ளூர் போலீசுக்கு தெரியாமல் பீகாரில் தீவிரவாதியை கைது செய்ததற்கு கர்நாடக காவல்துறையை கடுமையாக கண்டித்துள்ளார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார். கடந்த 2010ம் ஆண்டு பெங்களூரில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சின்னசாமி ஸ்டேடியத்தின் இரண்டு வாயில்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 5 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகைதின் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தது. இது தொடர்பாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பீகாரைச் சேர்ந்த பிலால் என்பவரை பெங்களூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பீகாரைச் சேர்ந்த கபீல் அகமது குண்டுவெடிப்பில் முக்கிய சதிகாரனாக செயல்பட்டது தெரியவந்தது. கபீல் அகமது ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. ஆந்திர போலீஸ் உதவியுடன் அகமதுவை கர்நாடக போலீசார் தேடி வந்தனர்.
அவர் சொந்த மாநிலத்துக்கு தப்பியதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில கூட்டுப்படையினர் பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் அகமதுவை கைது செய்தனர். அவருடன் பெங்களூரை சேர்ந்த சயீத் என்பவரும் சேர்த்து கைது செய்யப்பட்டார். இது குறித்து பீகார் போலீசுக்கு கர்நாடக போலீசார் எந்த தகவலும் தரவில்லை. இது தற்போது பெரிய பிரச்னையை கிளப்பியுள்ளது. இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்வது குறித்தோ அல்லது கைது செய்த பின்னரோ லோக்கல் போலீசுக்கு கர்நாடக போலீசார் எந்த தகவலும் தரவில்லை. டிஜிபி மட்டத்திலும் எந்த தகவலும் தரப்படவில்லை. கைது செய்த பின்னர் பீகார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் அண்டை மாநிலமான ஜார்கண்டில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த மாநிலத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு புகார் கடிதம் எழுதுவேன் என்றார். கைது நடவடிக்கை குறித்து பீகார் போலீசுக்கு முன்கூட்டியே தெரிவிக்காதது குறித்து பீகார் சென்ற கர்நாடக போலீஸ் படை தலைவர் ஏ.ஆர். இன்பன்ட் கூறுகையில், அசாதாரண வழக்குகளில் கைது செய்த பின்னர் லோக்கல் போலீசுக்கு தகவல் சொன்னால் போதும். இது அசாதாரணமான வழக்கு என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook