சென்னை :முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிகாலை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிமுக எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. டெல்லியில் தலைவர்கள் யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக மாநில முதல்வர்கள் மாநாடு கடந்த மாதம் 16,ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், ‘தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இது முக்கிய பிரச்னை என்பதால், இதுகுறித்து தனியாக முதல்வர்கள் மாநாட்டை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்பட சில மாநில முதல்வர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்றும் தேதி தனியாக மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்டி விவாதிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்கான முதல்வர்கள் மாநாடு, டெல்லியில் உள்ள விஞ்ஞான்பவனில் இன்று காலை தொடங்கியது. மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். இதில் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி உள்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிகாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ராஜகோபால், டிஜிபி ராமானுஜம், முதல்வரின் தனி செயலாளர்கள், உதவியாளர்களும் சென்றனர். விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். காலை 7.45 மணிக்கு டெல்லி சென்றடைந்த ஜெயலலிதாவை அதிமுக எம்.பி.க்கள், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி அசோகன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். டெல்லி புறப்படுவதற்கு முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நிருபர்களுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ‘ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மற்ற கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுவீர்களா?
என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிமுக இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை. மாநாட்டில் பங்கேற்பதை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை என்றார். மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இன்று மாலையே முதல்வர் சென்னை திரும்புகிறார். யாரும் அணுகவில்லை டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு ஜெயலலிதா அளித்த பதில்கள்: ஜனாதிபதி தேர்தலில் அதிமுக நிலை என்ன? இது தொடர்பாக எங்களை இதுவரை யாரும் அணுகவில்லை. எனவே, அதுபற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்க ஏற்கனவே நீங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளீர்கள். இன்றைக்கு நடக்கும் கூட்டத்தில் உங்கள் நிலை என்ன? பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் நான் பேச உள்ளேன். என்ன பேசினேன் என்பது பின்னர் உங்களுக்கு தெரியவரும். முல்லை பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று தமிழகத்துக்கு ஆதரவாக கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே? நாங்களும் தொடர்ந்து இதைத்தான் கூறி வருகிறோம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook