ஆளும் கட்சிக்கு ஆறுதல் லண்டன் மேயராக போரிஸ் மீண்டும் தேர்வு
லண்டன் :லண்டன் மேயராக கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்தில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பலத்த தோல்வியை தழுவி உள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். லண்டன் மேயராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த தற்போதைய மேயர் போரிஸ் ஜான்சன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இது அக்கட்சிக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் கென் லிவிங்ஸ்டன் 62 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அவர் கூறுகையில், எனது ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர் மேயராக வர வேண்டும் விரும்பிய மக்களுக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிட மாட்டேன் என்றார். மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சியோபன் பெனிட்டா என்ற பெண் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு 80 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன.