லண்டன் :தண்டுவட வளைவு நோய், இங்கிலாந்தில் 3 தலைமுறையை பாதித்திருக்கிறது. பாட்டி, அம்மாவை தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விரைவில் ஆபரேஷன் செய்யப்படுகிறது. மூளையின் பின் கீழ் பகுதியில் உள்ள ஆக்சிபிட்டல் எலும்பில் தொடங்கி இடுப்பின் கீழ் பகுதி வரை நீண்ட நரம்பு திசுக்களின் தொகுப்பே தண்டுவடம். இது சிறிய அளவில் பாதிக்கப்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். இது பக்கவாட்டில் ஆங்கில எழுத்து ‘எஸ்’ போல வளைந்திருக்கும் பாதிப்பை ‘ஸ்கோலியாசிஸ்’ என்கிறது மருத்துவ உலகம். இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியில் உள்ள பர்ன்லே நகரை சேர்ந்த பெண் ஜென்னட் இங்காம் (36). ஸ்கோலியாசிஸ் பாதிப்பால் அவதிப்பட்ட இவர் பல்வேறு கட்ட ஆபரேஷனுக்கு பிறகு தற்போது இயல்பாக உள்ளார். இந்நிலையில் இவரது மகள் ஜெசிகா (13) இதே பாதிப்பால் அவதிப்பட்டு சிகிச்சையில் உள்ளார். சிறுமிக்கு விரைவில் ஆபரேஷன் நடக்க உள்ளது. ஆபரேஷனுக்கு தயாராகும் விதமாக, டாக்டர்களின் அறிவுரைப்படி பிரத்யேக பாதுகாப்பு பெல்ட் ஒன்றை சிறுமி தற்போது அணிந்திருக்கிறாள். தினமும் 21 மணி நேரம் இதை அணிய வேண்டும்.
இதுபற்றி ஜென்னட் கூறுகையில், என் அம்மா ஜெனிபர், நான், இப்போது 3,வது தலைமுறையாக என் மகள் ஜெசிகாவை தண்டுவட வளைவு நோய் பாதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் அவ்வளவாக இல்லை. படிக்க, விளையாட முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருப்பதால் என் மகள் விளையாடுகிறாள். விரைவில் பூரண குணம் பெறுவாள் என்று நம்புகிறேன் என்றார். சராசரியாக 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், சிலரை வெகுவாக பாதிக்கும். கவனிக்காமல் விட்டால் எலும்பு வலுவிழந்து நடக்க, உட்கார, படுக்க முடியாது. இதை சரிசெய்யும் ஆபரேஷன் மிக சிக்கலானது. தண்டுவடத்தை நேராக்கும் வகையில் உலோக கம்பி பொருத்தி, அதில் எலும்புகளை பொருந்த செய்ய வேண்டும். ஆபரேஷனில் சிறு கோளாறு நடந்தாலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு. இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook