புதுடெல்லி :தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக மாநில முதல்வர்கள் மாநாட்டை கடந்த மாதம் 16,ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. இந்த மாநாட்டில் ‘தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இது முக்கியமான பிரச்னை என்பதால் இதுதொடர்பாக தனியாக முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஜெயலலிதா, மம்தா உள்ளிட்ட சில முதல்வர்கள் வலியுறுத்தி இருந்தனர். அதை ஏற்று, மே 5,ம் தேதி மாநில முதல்வர்கள் மாநாடு மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நாளை நடக்கிறது. விஞ்ஞான் பவனில் நடக்கும் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை வகிக்கிறார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாநாட்டில் பங்கேற்றுவிட்டு நாளை மாலையே சென்னை திரும்புகிறார். தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது, மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது என ஜெயலலிதா, நரேந்திர மோடி உள்ளிட்ட சில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, நாளை நடக்கும் முதல்வர்கள் மாநாட்டில் இதுகுறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக தெரிவிக்கும் எனவும் தெரிகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook