கிரிமினல்களின் கூடாரம் அன்னா குழுவினர் மீது முலாயம் சிங் கடும் தாக்கு
புதுடெல்லி :ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் அன்னா குழுவினரை கிரிமினல்களின் கூடாரம் என சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கடுமையாக தாக்கியுள்ளார். அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போதுள்ள எம்.பி.க்களில் 162 பேருக்கு கிரிமினல் குற்ற பின்னணி உள்ளது. அவர்களில் பலரை வீட்டு கல்யாணம் உள்ளிட்ட விழாக்களுக்கு அழைக்கவே முடியாது. தொழிலதிபர்கள் பலர் பணபலத்தை பயன்படுத்தி எம்பி ஆகிவிடுகிறார்கள். இப்படிபட்டவர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தை எப்படி மதிக்க முடியும் என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில், அன்னா குழுவினர் இருப்பது கிரிமினல்களின் கூடாரம் என சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். அன்னாவை சுற்றி ஊழல்வாதிகள் நிறைந்திருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கூறுவதை நாம் கண்டு கொள்ள கூடாது. இன்னும் சில தினங்களில் அவருக்கு பைத்தியம் பிடித்து விடும் என கடுமையாக சாடியுள்ளார்.