தி.மலையில் இன்று பரிதாபம் மின்னல் தாக்கி 2 விவசாயிகள் பலி
திருவண்ணாமலை :திருவண்ணாமலையில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் 2 விவசாயிகள் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை அடுத்த மேல்படூர் வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன் (50), முனுசாமி(42), சுந்தரமூர்த்தி(40), விவசாயிகள். இவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை,காஞ்சி சாலையில் உள்ள பெரியகுளம் கிராமத்திற்கு இன்று காலை 8 மணியளவில் விவசாய வேலைக்கு வந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பெரியகுளம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள புளியமரத்தின் கீழ் 3 பேரும் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென இடி, மின்னல் அவர்களை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த முனுசாமி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவம்: கீழ்பென்னாத்தூர் அடுத்த கடம்பை கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(55), விவசாயி. இவர் இன்று காலை தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழைக்காக நிலத்தில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கினார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அவர் அதே இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.