சித்தூர் :கார் மீது கர்நாடக அரசு பஸ் மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் திலக்வாடா தாலுகா வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் உதயநாத் கவுடு(43). இவர் அங்குள்ள தனியார் பள்ளி தலைமையாசிரியர். இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் உதயநாத் கவுடு, மனைவி பூஜா(38), மகன் ஆதித்யா(18) மகள் சித்ரா(5) ஆகியோர் காரில் புறப்பட்டு திருப்பதிக்கு வந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த சந்திரகாந்த்(34) என்பவர் ஓட்டினார். உடன் அவரது மகன் ஓம்கா(8) வந்திருந்தான். இவர்கள் அனைவரும் நேற்றிரவு திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகு திருப்பதிக்கு காரில் வந்தனர். அங்கு இரவு உணவு சாப்பிட்ட அவர்கள் 11 மணியளவில் மீண்டும் திருப்பதியில் இருந்து பெல்காமிற்கு புறப்பட்டனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் சித்தூர் அடுத்த பங்காருபாளையம் அருகே மாதவன் நகர் பகுதியில் பெங்களூர் சாலையில் இவர்களது கார் வந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்த கர்நாடக அரசு பஸ், கார் மீது மோதியது. இதில் காரில் வந்த உதயநாத் கவுடு, டிரைவர் சந்திரகாந்த் ஆகிய இருவரும் அதே இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த ஆதித்யா உள்ளிட்ட 4 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா, ஆதித்யா, சித்ரா ஆகியோர் இறந்தனர். இதுகுறித்து பங்காருபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி 5 பக்தர்கள் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook