ஜனார்த்தன ரெட்டி மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் சிபிஐ காவல் நீட்டிப்புக்கு எதிர்ப்பு
பெங்களூர் : சுரங்க மோசடி வழக்கில் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூர் ஐகோர்ட்டில் கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஒபலபுரத்தில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமாக மைனிங் கம்பெனியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி ஜனார்த்தன ரெட்டியை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தது. இதற்கிடையே, கர்நாடகாவில் ரெட்டிக்கு சொந்தமான அசோசியேட்டட் மைனிங் கம்பெனியிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்து புதிய வழக்கு பதிவு செய்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2ம் தேதி பெங்களூர் சிபிஐ கோர்ட்டுக்கு ஜனார்த்தன ரெட்டி அழைத்து வரப்பட்டார். அவரை மார்ச் 12ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க சிபிஐ கோர்ட் அனுமதி வழங்கியது. சிபிஐ காவல் முடிந்து 12ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜனார்த்தன ரெட்டியை மேலும் 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதை கோர்ட் ஏற்றுக் கொண்டு சிபிஐ காவலை 4 நாள் நீட்டித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பெங்களூர் ஐகோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி வழக்கு தொடர்ந்தார். சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டது சட்டவிரோதம் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்தா நேற்று விசாரித்து, சிபிஐ காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்ததில் எந்த தவறும் இல்லை என கருத்து தெரிவித்தார். ஜனார்த்தன ரெட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.