ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்வர் கிரண்குமாரை மாற்ற வலியுறுத்தி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.ஆந்திரா, கேரளா, தமிழகம், ஒரிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. ஆந்திராவில் தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் ஒன்றில்கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் கிரண்குமார் ரெட்டியை மாற்ற வேண்டும் என்ற குரல் மாநில காங்கிரசில் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் ரவீந்திர ரெட்டி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.துணை முதல்வர் ராஜநரசிம்மராவும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். கிரண்குமாரால் கட்சியை நடத்த முடியாவிட்டால் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சங்கர் ராவ் உள்பட பல மாஜி அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் கிரண்குமார் ரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தெலங்கானா பிரச்னையை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ரோசய்யா முதல்வர் பதவியை இழந்தார். தற்போது தெலங்கானா பகுதி இடைத்தேர்தல் தோல்வி காரணமாக முதல்வர் கிரண்குமாருக்கும் சிக்கல் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook