நாளை ரயில்வே பட்ஜெட் பயணிகள் கட்டணம் உயருமா?
புதுடெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றினார். இந்நிலையில், நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக பயணிகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்திய ரயில்வே தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்திய பிறகு உபரியாக இருந்த நிதி கரைந்து விட்டது. ரயில்வே சரக்கு கட்டணம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. இதன்வாயிலாக 15 ஆயிரம் கோடி நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் தேவைகளை சமாளிக்க மத்திய அரசிடம் ரூ.50,000 கோடி நிதியுதவியை ரயில்வே கேட்டிருந்தது. இதில் 25,000 கோடி மட்டுமே ஒதுக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்கள், நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல திட்டங்கள் மந்தகதியில் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்துகள் ஏற்பட்டன. எனவே சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன் சிஸ்டத்தை மேம்படுத்தும் வகையிலான அறிவிப்புகள் நாளைய ரயில்வே பட்ஜெட்டில் இருக்கும் என தெரிகிறது. அதிவேக புல்லட் ரயில் உள்பட புதிய ரயில் பற்றிய அறிவிப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.