ஆசிய கோப்பையை இந்தியா வெல்லும் : சொல்கிறார் கங்குலி
வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று இலங்கையை எதிர்த்து ஆடுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியை நியோ கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடர்ச்சியாக 2 டூர்களிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் இந்த தொடரை இந்தியா எதிர்கொள்கிறது. 5 முறை ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும் சமீபத்தைய தோல்விகளால் துவண்டுபோய் உள்ளது. அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தால் மட்டுமே புத்துணர்ச்சி கிடைக்கும். இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு பலவீனமாகவே உள்ளது. ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வந்த உமேஷ்யாதவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அசோக் தின் டா நம்பிக்கை அளிக்கக்கூடும் என தெரிகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ரன்களை அதிகம் விட்டுகொடுப்பது பலவீனம். ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் யூசுப்பதான் இடம்பெற வாய்ப்புள்ளது.
பேட்டிங்கில் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி வசப் படும். போட்டி நடை பெறும் மிர்பூர் மைதானத்தில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இந்தியா ஒரு முறையும், இலங்கை 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 3 முறையும் 2வது பேட் செய்த அணியே வெற்றி கண்டுள்ளது. இதற்கிடையே இந்த தொடர் குறித்து மாஜி வீரர் கங்குலி கூறுகையில், இந்திய அணி நிச்சயம் ஆசிய கோப்பையில் பட்டம் வெல்லும். அடுத்தடுத்த தொடர்ச்சியான 2 டூர்களில் தோல்வியடைந்த நிலையில் வீரர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை அணியில் பவுலிங் மட்டும்தான் பிரச்னை என்றார்.