கொல்கத்தா ஆஸ்பத்திரி தீவிபத்து வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கொல்கத்தா : நோயாளிகள் 86 பேர் உள்பட 90 பேரை பலிவாங்கிய கொல்கத்தா தனியார் மருத்துவமனை தீ விபத்து தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் எதிராக அலிப்பூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் 7 மாடி கட்டிடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி தீப்பிடித்தது. இதில் நோயாளிகள் 86 பேர் உள்பட 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மருத்துவமனை இயக்குநர்கள், டாக்டர்கள், உயர் அதிகாரிகள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, அஜாக்கிரதையால் உயிரிழப்பு ஏற்படுத்துதல், உயிரிழப்பு ஏற்படுத்த முயற்சித்தல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பேரில் 3 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 13 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேருக்கு எதிராக நேற்று அலிப்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 1200 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 450 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 7ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.