சினிமா தொழிலுக்கு கடன் கொடுப்பதில்லை : வங்கிகள் மீது கமல்ஹாசன் காட்டம் !
சென்னை : கோழி பண்ணை வைப்பதற்கு கடன் கொடுக்கும் வங்கிகள் சினிமா தொழிலை கண்டுகொள்வதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். இதுபற்றி கமல்ஹாசன் கூறியதாவது: நான் சினிமாக்காரன். அரசியலில் இருப்பவன் அல்ல. என்னை போல இங்கு பலர் இருக்கிறார்கள். திரைஉலகம் வளர்வதற்கு அவர்கள் சுயநலம் இல்லாமல் உழைக்கிறார்கள். சினிமாவுக்கு வங்கிகள் மூலம் முதலீடுகள் அதிகம் கிடைப்பதில்லை. முறையான அமைப்புகள் உதவி செய்யாததால், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், சட்ட விரோத முறையில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். சினிமாவுக்குள் நுழைந்து விடுகிறார்கள். பாலிவுட்டில் தாதாக்கள் பைனான்ஸ் செய்கின்றனர். நியாயமான முறையில் தேவைப்படும் பணம், சினிமா தொழிலுக்கு கிடைப்பதில்லை. இதனால்தான் தாதாக்கள் சினிமா துறைக்குள் எளிதில் நுழைந்துவிடுகின்றனர்.
கோழி பண்ணை வைத்திருப்பவர்களுக்கு கடன் கிடைக்கிறது. சினிமாக்காரர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்காலத்தில் இது சீரடையும். சினிமா இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். செல்போன்களில் பல தகவல்களை பெறுவதுபோல் சினிமா தகவல்களையும் உடனுக்குடன் பெறுவதற்கு ஏற்ற கையடக¢க கருவி உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.