புதுடெல்லி : வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி கடந்த ஜூன் 3ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாபா ராம்தேவ் தொடங்கினார். அன்று நள்ளிரவு ராம்தேவ் ஆதரவாளர்களை போலீசார் அடித்து விரட்டினர். ராம்தேவை கைது செய்து தனி விமானத்தில் ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்தில் கொண்டுபோய்விட்டனர். 15 நாள் டெல்லிக்கு வரக்கூடாது என கட்டளையிட்டனர். போலீஸ் தடியடியில் பெண் ஒருவர் 10 நாட்களுக்கு பிறகு இறந்தார்.
போலீசாரின் அத்துமீறல் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, போலீஸ் தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராம்லீலா சம்பவத்துக்கு ராம்தேவ்தான் முழு பொறுப்பு என கூறப்பட்டுள்ளது. யோகா வகுப்பு நடத்தப் போவதாக ராம்தேவ் அனுமதி வாங்கியதாகவும், பின்னா அதை உண்ணாவிரத போராட்டமாக மாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடியதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அச்சத்தில் ராம்தேவ் நிகழ்ச்சிக்கு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், மைதானத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியபோது போலீஸ் நடவடிக்கைக்கு ராம்தேவ் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook