கள்ளமார்க்கெட்டில் திருப்பதி லட்டு விற்பனை : ஊழியர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. தேவஸ்தான கவுன்டர்களில் பக்தர் ஒருவருக்கு 4 லட்டுகள் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு கோயிலுக்கு வலதுபுறமாக உள்ள கவுன்டர்களில் லட்டு வினியோகிக்கப்படுகிறது. இதேபோல் கோயிலுக்குள் Ôவகப்படிÕ எனப்படும் லட்டு பிரசாத வினியோக அறையும் உள்ளது. இங்கு விஐபி மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளின் பேரில் வருவோர் மற்றும் கல்யாண உற்சவத்தில் பங்குபெறுவோருக்கு பெரிய லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் விற்கப்படுகிறது. இந்த பிரசாத கவுன்டரில் விற்பனைக்கு வைக்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கை அடிக்கடி குறைந்து விடுவதாக கூறப்படுகிறது. இவற்றை கள்ளமார்க்கெட்டில் தேவஸ்தான ஊழியர்கள் சிலர் விற்பதாக புகார் வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீனிவாசராஜு கூறுகையில்,‘‘கோயிலில் உள்ள வகப்படி பிரசாத கிடங்கில், அடிக்கடி லட்டுகளின் இருப்பு குறைந்து வருவதாக புகார் வந்தது. ஆய்வு செய்ததில் லட்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம். முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.