சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை நேர படிப்புகள்!
இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் சிரமப்படும் மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அதற்கேற்ற பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் பகுதிநேர, மாலைநேர படிப்புகளை அறிமுகப்படுத்த சென்னை பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பல்கலையில் மாலைநேர படிப்புகள் இருந்தன. நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி இந்த கல்வியாண்டில் எம்பிஏ, எம்எஸ்சி ஜியோமெட்ரிக்ஸ் ஆகிய 2 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில் பணிபுரிவோர் பயன்பெறும் வகையில் ஊடகவியலில் முதுநிலை பட்டப்படிப்பு, பகுதி நேர படிப்பாக நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பான இதில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும். 10 நாட்களுக்கு ஒரு பிரிவு வீதம் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டியது கட்டாயம். ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த மாலை நேர மற்றும் பகுதி நேர முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியும். இது தொடர்பான விவரங்களை பல்கலை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.