பாட்னா: மத்திய அரசின் தவறான கொள்கைகளே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல் விலையை மத்திய அரசு கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தியது. ‘பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை உயர்த்தியுள்ளன. இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் அளித்தார். பெட்ரோல் விலை உயர்வை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், டீசல் மீதான விலை கட்டுப்பாட்டையும் விரைவில் நீக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால், அமைச்சரவையில் இருந்து விலகப்போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக திரிணாமுல் எம்.பி.க்கள், பிரதமருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், விலைவாசி கடுமையாக உயர்வதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விலைஉயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook