அதிமுக நிர்வாகி கழுத்தறுத்து கொலை கிருஷ்ணகிரியில் பயங்கரம் : மாந்தோப்பில் சடலம் வீச்சு
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் அதிமுக நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். மாந்தோப்பில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய கெட்டுப்பள்ளம் என்ற கிராமத்தில் மாந்தோப்பு உள்ளது. அந்த வழியாக இன்று காலை சென்ற சிலர், மாந்தோப்பில் ஒரு ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழுத்து அறுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொல்லப்பட்டது கிருஷ்ணகிரி சீனிவாசா காலனியைச் சேர்ந்த இனயத்துல்லா (55) என தெரிய வந்தது. கிருஷ்ணகிரி நகர அதிமுக ஜெ. பேரவை இணை செயலாளர். ரியல் எஸ்டேட், கார் புரோக்கர் வேலையும் செய்துள்ளார். இவரை நேற்றிரவு மர்ம நபர்கள் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. நேற்றிரவு மாந்தோப்பு வழியாக 2 டூவீலர் அடுத்தடுத்து சென்றதாகவும், சிறிதுநேரம் கழித்து ஒரு டூவீலரில் ஒரு இளம்பெண் சென்றதாகவும் கிராம மக்கள் கூறினர். இதனால் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இனயத்துல்லாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.