நாகர்கோவில் : வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. வரும் 2012 ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நாளை தொடங்குகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மனுக்களை நாளை முதல் வரும் நவம்பர் 8ம் தேதி வரை அளிக்கலாம். மனுக்களை பெற வரும் அக்டோபர் 30ம் தேதியும், நவம்பர் 6ம் தேதி என்று ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
மேலும் வரும் அக்டோபர் 29ம் தேதி மற்றும் நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவு ஆகியன படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும். முன்னதாக புகைப்பட வாக்காளர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், தாசில்தார் அலுவலகங்களில் வாக்குசாவடிகளிலும் பார்வைக்கு வைக்கப்படும். கிராம சபைகளில் வாக்காளர் பட்டியல் நகல் இடம்பெறும். வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏ, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே மாறியிருந்தால் படிவம் 8 ஏ, பெயரை நீக்க படிவம் 7, பெயர், வயது, பாலினம், உறவு முறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெற செய்ய படிவம் 8ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வெளிநாட்டில் வசிப்போர் வெளிநாட்டில் வசிக்கின்ற இந்திய குடிமக்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், பிற விபரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்கள் ஜெராக்ஸ் நகலும் அளிக்கப்பட வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்ப கொடுத்துவிடுவார். படிவம் 6 ஏ தபாலில் அனுப்பும்போது பாஸ்போர்ட் நகல்கள் சுய சான்றொப்பமிடப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook