ஐதராபாத் : தெலங்கானா பிரச்னையில் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வலியுறுத்தினார். டெல்லியில் நேற்று தேசிய வளர்ச்சி கவுன்சில் மாநாடு நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக்காக டெல்லி சென்றிருந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் தெலங்கானா பிரச்னை குறித்து விளக்கி கூறினார். மேலும் இது தொடர்பாக மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சோனியா, அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பிறகு தற்போதுதான் அவரை கிரண்குமார் சந்திக்கிறார்.
ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வேலைவாய்ப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்திய கிரண் குமாருக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். தெலங்கானா பிரச்னையில் சோனியா தலையிட வேண்டும் என்று கிரண்குமார் கோரிக்கை வைத்தார். தெலங்கானா பிரச்னையில் இறுதி முடிவெடுக்க 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்றும், இது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்றும் சோனியா, கிரண் குமாரிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ரண்குமார் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், குஜராத், மேற்கு வங்கம், அசாம், மற்றும் பீகார் மாநில முதல்வர்களுடன் மதிய விருந்தில் கலந்து கொண்டார். அப்போது கிரண்குமார், தெலங்கானா போராட்டத்தால் ஆந்திராவில் கடும் மின் பற்றாக்குறை நிலவியபோது, கூடுதல் மின்சாரம், நிலக்கரி, எரிவாயு கொடுத்து உதவியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தையும் சந்தித்து பேசினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook