பாக். அதிபர் மகனை கடத்த அல் கய்தா, தலிபான்கள் சதி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மகன் பிலாவல் (23), இங்கிலாந்தில் வசிக்கிறார். ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் அடிக்கடி பாகிஸ்தான் வந்து செல்கிறார். இவரை கடத்தி செல்ல அல் கய்தா, தலிபான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, பிலாவலுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் நேற்று கூறியுள்ளார்.
மாலிக் மேலும் கூறுகையில், அதிபர் சர்தாரி மகன் உள்பட பல முக்கிய தலைவர்களை கடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளது குறித்து கடந்த மாதம் ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அதிபர், பிரதமர் கிலானிக்கு இந்த தகவலை தெரிவித்து பாதுகாப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டேன். அதன்பின், அக்டோபர் 14ம் தேதி உயர் மட்டக் குழு கூட்டம் நடந்தது. அதில், கடத்தல் திட்டம் தீட்டியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க உத்தரவிடப்பட்டது.
மறைந்த பஞ்சாப் கவர்னர் சல்மான் தசீரின் மகன் ஷாபாஸ் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி லாகூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக எங்களுக்கு இப்போது தகவல் கிடைத்துள்ளது. ஆப்கன் எல்லையில் பழங்குடியினர் வசிக்கும் மலைப்பகுதியில் அவரை தீவிரவாதிகள் வைத்துள்ளதாக தெரிகிறது என்றார்.