ஜாமீன் வழங்க கோரி எடியூரப்பா சார்பில் ஐகோர்ட்டில் மனு!
பெங்களூர்: அரசு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையில் நெஞ்சுவலி காரணமாக சனிக்கிழமை நள்ளிரவு எடியூரப்பாவை ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், எடியூரப்பா கைது விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்வர் சதானந்த கவுடா இன்று காலை 10.30 மணிக்கு தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மாநில பாஜ தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே நீதிமன்ற காவலில் உள்ள எடியூரப்பாவுக்கு ஜாமீன் வழங்க கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.