மாற்று சக்தியாக மதிமுக வளர மக்கள் ஆதரவளிக்க வேண்டும் : வைகோ
திருச்சி: மாற்று சக்தியாக மதிமுக வளர பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என திருச்சியில் வைகோ பிரசாரம் செய்தார். திருச்சி மதிமுக மேயர் வேட்பாளர் ரொகையா பீவியை மற்றும் கவுன்சில் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ திருச்சி சிந்தாமணியில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
மாம்பழச்சாலையில் அவர் பேசியதாவது: கடந்த சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் மக்கள் பணிக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 7 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டோம். ராஜீவ் கொலையாளிகள் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகிறோம்.
தமிழக சட்டசபையில், 3 பேருக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இது போல் அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதிமுக மாற்று சக்தியாக வளர பொதுமக்கள் மதிமுக வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.