சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். இவர், தினமும் சட்டசபை தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை எழும்பூர் தொகுதியில் உள்ள புதுப்பேட்டையில் பிரசாரத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கினார். அதைத் தொடர்ந்து புரசைவாக்கம் தானா தெரு, எழும்பூர் நெடுஞ்சாலை, நேரு பார்க், முருகப்பா தெரு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிப்பின்போது மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. அந்த இடங்களில் அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன. இதுபோல பல பூங்காக்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சென்னையை பசுமை நிறைந்த, சுகாதாரமான நகரமாக உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகம் அருகில் உள்ள கூவம் நதியை ஒட்டியிருந்த பகுதியை சீரமைத்து பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. லாங்கஸ் கார்டன் பகுதியில் சுமார் ரூ.2 கோடி செலவில் கூவம் கரையில் அழகிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் பேசினார்.
வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் திமுக பகுதி செயலாளர் கோ.ஏகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தி.நகர் தொகுதியில் உள்ள 130, 132, 133, 134, 135, 136, 141 ஆகிய வார்டுகளில் மா.சுப்பிரமணியன் நாளை வாக்கு சேகரிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook