தேர்தலுக்காக வினியோகமா? 450 வீட்டு வாசலில் அரிசி மூட்டைகள்!
கடலூர்: உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடலூர் அருகே ஒரு கிராமத்தில் 450 வீடுகளில் அரிசி மூட்டைகள் கிடந்தன. எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் யாரோ இந்த அரிசி மூட்டைகளை போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள் உள்ளன. கடலூர் ஊராட்சி ஒன்றியம் விலங்கம்பட்டு ஊராட்சியில் 1,600 வீடுகள் உள்ளன. குழந்தை குப்பம், பெத்தாங்குப்பம், குழந்தைகுப்பம் காலனி, பெத்தாங்குப்பம் காலனி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சரவணன், ராமதாஸ், சிவரங்கன் ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குசேகரிப்பு சூடுபிடித்துள்ள நிலையில் நேற்றிரவும் வேட்பாளர்கள் வீதிவீதியாக வாக்கு கேட்டனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி விட்டனர். இன்று அதிகாலை வாசல் தெளிப்பதற்காக கதவை திறந்த பெண்கள் வீட்டு வாசலிலும் திண்ணைகளிலும் 25 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டை கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 450 வீடுகளில் இவ்வாறு அரிசி மூட்டைகள் கிடந்தன.
இதுபற்றி கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர். மேலும் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான சீனுவாசன் விலங்கம்பட்டு ஊராட்சிக்கு சென்று அரிசி மூட்டைகள் வீசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில் ‘‘இதுபோன்று தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு காரணமானவர்கள் யார் என விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் யார் என தெரியவந்தால் கைது செய்யப்படுவார்கள். வேட்பாளர்கள் தேர்தல் விதிகளை கடைபிடித்து அதன்படி நடக்க வேண்டும்’’ என்றார்.