இந்திய கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவி!
லண்டன்: இந்திய கடல் பகுதியில் 20 நாடுகள் சேர்ந்து மீண்டும் முழு வீச்சில் சுனாமி எச்சரிக்கை பரிசோதனையில் ஈடுபட உள்ளன. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுமத்ராவில் 9.2 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தை அடுத்து சுனாமி தாக்குதல் நடந்தது. இதில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உட்பட இந்திய கடல் பகுதியில் உள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுனாமி தாக்குதலில் அப்போது 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். அதன்பின், இந்திய கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவி நிறுவ வேண்டும்.
பேரிடர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்திய கடல் பகுதியை சேர்ந்த நாடுகள் யுனெஸ்கோ கடலாய்வு துறையிடம் கோரிக்கை வைத்தன. அதன்படி, கடந்த 2005ல் இந்த நாடுகளின் ஒருங்கிணைப்பு குழுவை யுனெஸ்கோ அமைத்தது. அப்போது சுனாமி எச்சரிக்கை முறையை ஓரளவு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 12ம் தேதி முழு வீச்சில் சுனாமி எச்சரிக்கை கருவியின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான தகவல்கள் இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் உள்ள புதிய பிராந்திய சுனாமி தகவல் சேவை மையங்கள் மூலம் வெளியிடப்படும் என்று யுனெஸ்கோ கல்வி, அறிவியல் கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை பரிசோதனை முறையை யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் இரினா பொகோவா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார்.