ஐதராபாத்: தெலங்கானா தனி மாநில போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் ஆந்திர அரசுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என காங்கிரஸ் அஞ்சுகிறது. இதனால் பிரச்னையை சமாளிக்க, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பிரதமருடன் ஆலோசிக்க, ஆந்திர கவர்னர் அவசரமாக டெல்லி செல்கிறார். ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி டிஆர்எஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொடர் போராட்டங்களை நீண்டகாலமாக நடத்தி வருகின்றன.
கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். தெலங்கானாவுக்கு ஆதரவாக சிலர் தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்டனர். இதுபற்றி மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை தர, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானா போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த மாதம் 13-ம் தேதி முதல் தெலங்கானா பகுதியில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், சுரங்க தொழிலாளர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. கடந்த மாதம் 2 நாட்கள் ரயில் மறியல் நடத்தப்பட்டது. போராட்டத்தால் தெலங்கானா பகுதியே ஸ்தம்பித்தது. மாநில அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தனி மாநில கோரிக்கைக்காக வரும் 9-ம் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் அமைதியான முறையில் நடந்துவந்த போராட்டம், கடந்த சில தினங்களாக வன்முறைக்கு மாறி வருகிறது. பஸ் எரிப்பு, பயணிகள் மீது தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. போராட்டம் தீவிரமடைவதால் மக்கள் மத்தியில் பீதி அதிகரித்து வருகிறது. மேலும், தெலங்கானா போராட்டத்தில் நக்சலைட்கள் ஊருருவி உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தியது. போராட்டம் வலுக்கும் பட்சத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முடியவில்லையே என்ற அவப்பெயர் காங்கிரஸ் அரசுக்கு ஏற்படும்.
அதை தவிர்க்க அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு கட்சி மேலிடம் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் ஒப்புக் கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் இன்று நடக்கும் காங்கிரஸ் உயர்நிலைக்குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், அவசரமாக இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை சந்தித்து பேசுகிறார்.
அப்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பிரதமரிடம் விரிவாக எடுத்துரைப்பார். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு கவர்னருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நரசிம்மனை டெல்லி வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் என செய்திகள் பரவி வருவதால் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook