திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று மாலை நிறைவு பெறுகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த 28-ம் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. 29-ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. பெரிய, சின்ன சேஷ வாகனங்கள், ஹம்சம், சிம்ம வாகனங்கள், கற்பக விருட்சம், மோகினி அவதாரம், கருட வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்தார்.
நேற்று காலை தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை குதிரை வாகனத்தில் சுவாமி பவனி வந்தார். 10 நாட்கள் நடந்த பிரம்மோற்சவ விழா இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. முன்னதாக இன்று காலை பெரிய ஜீயர், சின்ன ஜீயர் முன்னிலையில் ஏழுமலையான் கோயில் அருகே உள்ள வராக சுவாமி சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடந்தது. இதில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் எல்.வி.சுப்பிர மணியம், அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜ், இணைசெயல் அலுவலர் சீனிவாசராஜு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. மாலை 5.30 மணியளவில் கோயில் வளாகத்தில் உள்ள துவஜ ஸ்தம்பத்தில் பிரம்மோற்சவ கொடியிறக்கம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இலவச தரிசனத்துக்கு 16 மணி நேரம், ரூ.300 கட்டண தரிசனத்துக்கு 7 மணி நேரம், ரூ.50 கட்டணம் மற்றும் திவ்ய தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருந்தனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 1 மணி வரை சுமார் 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.1.90 கோடி. இதுதவிர ஆர்ஜித டிக்கெட் மூலம் ரூ.15,527, பிரசாத விற்பனை மூலம் ரூ.41 லட்சத்து 89,194 வருவாய் கிடைத்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook