எடியூரப்பா மீதான விசாரணை விரைந்து முடிக்க போலீசுக்கு உத்தரவு!
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ஊழல் விசாரணையை அக்டோபர் 26க்குள் முடிக்க போலீசுக்கு லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பத்ரா பாசனநீர் திட்ட ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு ரூ.13 கோடி கமிஷன் வழங்கப்பட்டதாக லோக் ஆயுக்தாவில் புகார் கூறப்பட்டது. ஊழல் புகார் காரணமாக எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த புகார் தொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட் உத்தரவின் பேரில் எடியூரப்பா மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று லோக் ஆயுக்தா கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக்ஆயுக்தா டெபுடி எஸ்பி கிரிஷ் நேரில் ஆஜராகி, ÔÔஇந்த வழக்கு தொடர்பாக டெண்டர் ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இன்னும் வாக்குமூலம் வாங்கவில்லை. இதற்கு கால அவகாசம் தேவை.
எடியூரப்பா குடும்பத்தினர் அறக்கட்டளைக்கு பணம் கைமாறியதற்கான ஆதாரமும் இன்னும் திரட்டப்படவில்லை. எனவே விசாரணையை முடிக்க 2 மாதம் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வரும் 26ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.