குஜராத் கவர்னரை நீக்க கோரி ஐகோர்ட்டில் பொது நல மனு!
அகமதாபாத்: குஜராத் மாநில பெண் கவர்னர் கமலா பெனிவாலை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி அகமதாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநில லோக் ஆயுக்தா தலைவர் நியமன விவகாரத்தில் மாநில கவர்னர் கமலா பெனிவாலுக்கும் முதல்வர் நரேந்திர மோடிக்கும் இடையே கடந்த மாதம் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து கவர்னரை நீக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கும் மோடி கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில் கவர்னர் கமலா மீது நேற்று மோடி புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பெண்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயன் அளிக்கும் சட்ட மசோதாக்களில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிவிட்டதாக கவர்னர் மீது குற்றம் சாட்டினார். இவர்களுக்கிடையிலான பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அகமதாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்கீல் அசோக் பாண்டே என்பவர் இந்த பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில், கமலா பெனிவால் நியமனத்தில் சட்டவிதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தசரா விடுமுறைக்குப்பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.