வெளிநாட்டு மொழிக்கல்வியில் புலமை பெற வேண்டுமா?
பலருக்கு பல்வேறு மொழிகளை கற்பதிலும், புலமை பெறுவதிலும் ஆர்வம் அதிகம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள், கல்வி நிறுவனங்களின் விவரம் தெரியாமல் தங்களது விருப்பங்களை புறந்தள்ளி விடுகின்றனர். வெளிநாட்டு மொழிக் கல்வியை அளித்து பேராசிரியராக உருவாக்கும் பணியை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் சிறப்பாக செய்து வருகிறது. இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில்விக்கிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 5 ஆண்டுகள் பயிலும் பி.ஏ., எம்.ஏ. பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
இளநிலை பட்டப்படிப்பில், ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்ச், ஜெர்மனி, ரஷ்யன், ஸ்பானிஷ், சைனிஷ், ஜப்பானிஷ், பெர்சியன், அராபிக் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகிறது. முதுநிலை மற்றும் பிஎச்.டி. பட்டப்படிப்புகளில், மொழிகள், இலக்கியம், மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர், கலாசாரப் பாடங்கள் அளிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு மொழிகளான இத்தாலியன், மங்கோலியன், போர்ச்சுகீஸ், பாசா இந்தோனேசியா, புஷ்டு, உருது மொழிகளில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. கொரிய மொழியில் பி.ஏ. பட்டப்படிப்பை அளிக்கும் ஒரே கல்வி நிறுவனம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு மொழிகள் மட்டுமல்லாமல், இந்திய மொழிகளிலும், இலக்கியம், ஆராய்ச்சி மற்றும் ஆங்கில மொழியும் இங்கு சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. அனைத்து பாடங்களும் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் மட்டும் கற்பிக்கப்படுகிறது. வருங்காலத்தில் இந்திய மொழிகளான சமஸ்கிருதம், பெங்காலி, தமிழ், மராத்தி மொழிகளிலும் கற்பிக்க திட்டமிட்டுள்ளது. மொழிகளில் புலமை பெறுபவர்களுக்கு உலக அளவில் சுற்றுலாத்துறை, கல்வி நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.