Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2021
10
Aug
வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு, பல ஆயிரம் கோடி டெண்டர் ஊழல்: அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு..!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மாநகராட்சி டெண்டர்களில் ஊழல், பணி நியமனங்களில் முறைகேடு, பினாமி நிறுவனங்கள் மூலம் காண்ட்ராக்ட் வழங்கியது உள்பட பல்வேறு ஊழல் புகார்கள் அடிப்படையில் அதிமுக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், பினாமி வீடுகள் மற்றும் நிறுவனங்கள், மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், சப்-கலெக்டர் வீடு என 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள், முதலீடுகள் சிக்கி உள்ளது. இதை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள வேலுமணியிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் மீது அவர்கள் வைத்திருந்த துறையில் மெகா ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்
தார். குறிப்பாக, அமைச்சர்கள் தங்களது பதவி காலத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து டெண்டர் விடுவது, பணி நியமனங்கள், பொருட்கள் கொள்முதல் செய்வது, வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடுகள் செய்ததாகவும் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்கள் அளித்தனர்.

இதனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாஜி அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டது.  இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. குறிப்பாக உள்ளாட்சித்துறை, போக்குவரத்துதுறை, மின்துறை, சுகாதாரத்துறை, உணவுத்துறை, ஆவின் உள்ளிட்ட முக்கிய துறைகளில் டெண்டர்கள், தேவையான தொகையை விட கூடுதலாக விடப்பட்டு, சுமார் ₹50,000 கோடிக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 13 மாநகராட்சிகளில் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நியமனம், பணி நியமனம், பொருட்கள் கொள்முதல், டெண்டர் விடுவது, மேம்பால பணிகள் என பல ஆயிரம் கோடி அளவுக்கு வேலுமணி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுகவின் ஊழல் குறித்து விசாரிக்க நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டார். நேர்மையான அதிகாரிகளான ஐஜி பவானீஸ்வரி, டிஐஜி லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். வேலுமணி உள்ளிட்ட பல அமைச்சர்களின் உறவினர்கள் மற்றும் ஆதரவு அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

சிலர் சட்டம் ஒழுங்கு பதவியில் நியமிக்கப்பட்டனர். அதேநேரத்தில் டிஜிபி கந்தசாமி, மாஜி அமைச்சர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்களை தூசி தட்டி எடுத்து, விசாரணை நடத்தி வந்தார். அதன் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அளிக்கப்பட்ட புகார்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு சொந்தமான சென்னை, கரூரில் உள்ள சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், வீடு மற்றும் அலுவலகங்கள், பினாமி மற்றும் சகோதரர் வீடுகள் என 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ₹25.56 லட்சம் ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், முதலீடுகளுக்கான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த அதிமுக ஆட்சியில் மலைக்க வைக்கும் வகையில் சொத்துக்கள் குவித்ததாக எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தது. கோவை கமிஷனர் அலுவலகத்தில் வேலுமணி மீது ஒருவர் புகார் அளித்தார். அவருக்கு வேலுமணி ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்ததால், அவர் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தார். இதேபோல், நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில், கோவை கணபதி ஜி.வி.ராவ் நகர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவர், கமிஷன் கொடுத்தால் ‘சிவில் ஒர்க்’ பணிகளை தருவதாக கூறி, ₹1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மீது அளித்த புகாரின் அடிப்படையில் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், முதல் குற்றவாளியாக எஸ்.பி.வேலுமணி, அவரது நெருங்கிய பினாமி வடவள்ளி சந்திரசேகர், சகோதரர் அன்பரசன் மற்றும் மாநகராட்சி முன்னாள் மற்றும் இன்னால் அதிகாரிகள் உட்பட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. வேலுமணி அமைச்சராக இருந்தபோது டெண்டர் விடுவது, எடுப்பதில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 16 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலத்தில் உள்ள பொறியாளருக்கு சொந்தமான மற்றும் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி, சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் உள்ள ஆலயம் பவுன்டேசன் பிரைவேட் லிமிடெட், ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனி ஆனந்தா ரோட்டில் உள்ள இரட்டை இலை மீடியா(டூ லீப் மீடியா) அலுவலகம், அதே முகவரியில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்,  ஏஆர்.இஎஸ்.பிஇ இன்ப்ரா பிரைவேட் லிமிடெட் அலுவலகம், அண்ணாசாலையில் தேனாம்பேட்டையில் உள்ள ஆலம் கோல்டு மற்றும் டைமன்ட் பிரைவேட் லிமிடெட், அபிராமிபுரத்தில் உள்ள வேலுமணியின் சகோதரர் அன்பரசு வீடு, வேளச்சேரி, முகப்பேர், வில்லிவாக்கம் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை காந்தி நகரில் உள்ள மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் மற்றும் முன்னாள் தலைமை பொறியாளர் புகழேந்தி ஆகியோர் வீட்டிலும் மாநகராட்சியில் நடந்த ஊழல்கள் தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில், குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணிக்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். குளத்துப்பாளையத்தில் உள்ள பண்ணை வீடுகள், கோவை வடவள்ளியில் உள்ள இன்ஜினியரும், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான சந்திரசேகர் (வேலுமணியின் பினாமி) வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடு, மதுக்கரையில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் மைத்துனரும், மதுக்கரை நகர செயலாளருமான சண்முகராஜா, சகோதரர் அன்பரசுக்கு சொந்தமான இடங்கள் உள்பட 15 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் முக்கியமான டைரி சிக்கியதாக கூறப்படுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வரவு மற்றும் செலவு தொடர்பான விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றிய மருதாந்தகியின் தந்தை சதாசிவத்தின் வீடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்னக்காம்பட்டி கிராமத்தில் உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை 7 மணி முதல் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேலுமணியின் ஆதரவு இருந்ததால் கோவை மாவட்டத்தை விட்டு, மருதாந்தகியை இடமாற்றம் செய்ய முடியவில்லை என்றும் ஏற்கனவே புகார் உள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த சோதனை நடந்துள்ளது. இதில் வேலுமணி மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் ஏராளமான ஆவணங்கள், முதலீடுகளுக்கான ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தந்தை, மகள் இருவரிடமும் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். வேலுமணிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என கோவையில் 35 இடங்கள், சென்னையில் 16 இடங்கள், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் தலா ஒரு இடம் என 53 இடங்களில் நடந்து வரும் மெகா ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement