சென்னை: அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட நிதிநிலை சீர்கேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால், அது அரசியல் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மேலாண்மை மிகவும் மோசமாக இருந்ததாக தி.மு.க. சார்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், நிதி நெருக்கடி நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்களை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இருந்த வருவாய் பற்றாக்குறை விவரம், கடன் சுமை மற்றும் அரசு செலுத்திய வட்டி தொடர்பான விவரங்கள், தனி நபர் வருமானத்தின் நிலை போன்றவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதை நாளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட உள்ளார். 120 பக்கங்களை கொண்ட வெள்ளை அறிக்கையாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக, கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். ஆனால், இப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் வழியே நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் எனத் தெரிகிறது. 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அது இருக்கும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த பல்வேறு விவாதங்களை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும். திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார். ஆனால் இந்த முறை எதிர்க் கட்சிகளின் கோரிக்கையோ அல்லது நிர்ப்பந்தமோ இல்லாமலேயே தமிழக அரசு, மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி சட்டசபைக்கு வெளியே வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு உயர்வு, ஜி.டி.பி.பியின் நிலை, பெறப்பட்ட வருவாயின் அளவு, திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை, கூடுதலாக ஆன செலவு என பல விவரங்களை கொண்டதாக இந்த வெள்ளை அறிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பரவல் தொடர்பாக தமிழகத்தில் அதிக நிதியை கடந்த அதி.மு.க. அரசு செலவழித்தது. அந்த செலவு விவரங்களும் வெள்ளை அறிக்கையில் இடம் பெறும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 1977-2001 இடையேயான கால கட்டத்தில் 9 வெள்ளை அறிக்கைகள் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சட்டசபைக்கு வெளியே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 1977ம் ஆண்டு முதல்வராக எம் ஜி.ஆர். இருந்தபோது, புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் மீது சட்டசபையில் 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 1981ம் ஆண்டு உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 1983ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது.
1994ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 1996ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மழை, புயல், வெள்ளம் நிவாரண நடவடிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2000ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசு பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு, பின்னடைவு பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒருநாள் விவாதம் நடைபெற்றது. 2001ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தின் நிதிநிலை குறிந்து வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்தில் அரசியல் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.