சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுதினம் காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள், உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகளுடன் வருகிற 23ம் தேதி காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தை பகுதிகளில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இன்று (நேற்று) நடந்த கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்வி துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதியில் இருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும். மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
* அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது.
* கடைகளின் நுழைவு வாயிலில் இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
* மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக, இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:
* நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
* கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு, நோய் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்:
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தொடர்புடைய துறைகளால் கண்டிப்பாக அமல்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
* கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும்.