சேலம், வாழப்பாடி மெயின் ரோட்டில் அயோத்தியாபட்டினம் தாண்டி சென்றால், 17 கி.மீ. தூரத்தில் வலதுபுறம் ஒரு பாதை திரும்புகிறது. இதில் 6 கி.மீ. தூரம் பயணித்தால் தேமலை உள்ளது. இங்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றில் தேன் கூடுகள் அதிகம் காணப்படுவதால் தேன்மலை என்று அழைக்கப்பட்டு, தேமலையாக மருவி விட்டது. சூரிய ஒளிகூட நுழைய முடியாத அளவுக்கு புளியமரங்களும் மற்ற மரங்களும் காடாக மண்டியிருக்கின்றன. இந்த காட்டில் ஏரிக்கரையோரம் அமர்ந்திருக்கிறார் வாரடி முனியப்பன். பட்ட பகலிலேயே இருள் கவ்விக் கிடக்கும் சூழல் திகிலூட்டுகிறது. கோயிலுக்கு கட்டிடம் எதுவும் இல்லை. வெட்ட வெளியில் அக்கம்பக்கம் இரு சிலைகளுடன் நடுவில் கண்களை உருட்டி மிரட்டும் விதத்தில் இருக்கிறது வாரடி முனியப்பன் சாமியின் தோற்றம்.
சுற்றுப்புறத்தில் உள்ள திருமனூர், வெள்ளாளக் குண்டம், மேட்டுப்பட்டி, வேப்பிலைப்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு வாரடி முனிதான் காவல் தெய்வம். ‘காத்து, கருப்பு, பேய் அண்டாமல் காப்பது வாரடி முனிதான்’ என தீர்க்கமாய் நம்புகிறார்கள் மக்கள். ஊர் எல்லையில் காவல் காத்து தங்களை காப்பாற்றும் வாரடி முனிக்கு வருடாவருடம் பொங்கலிட்டு, கிடா, கோழி அறுத்து வழிபாடு நடத்துகிறார்கள். வெள்ளாளக்குண்டம் கிராம மக்கள் ஏரியை கடந்துதான் முனியப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும். ஏரி நிரம்பினாலும் கூட, நீந்தி சென்றாவது முனியப்பனை வணங்குகிறார்கள்.
நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு வேண்டும்.. நல்ல கணவன் அமைய வேண்டும்.. சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும்.. பிள்ளைகள் நன்று படிக்க வேண்டும் என்றுதான் பொதுவாக கோயில்களில் பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். வாரடி முனியிடம் பக்தர்கள் வித்தியாசமான கோரிக்கைகளை வைக்கிறார்கள். டிரான்ஸ்பர் கிடைக்க வேண்டும்.. புரமோஷன், சம்பள உயர்வு வேண்டும்.. காதல் கைகூட வேண்டும் என்ற வேண்டுதல்களைத்தான் வாரடி முனியிடம் பல பக்தர்கள் வைக்கிறார்கள். அவற்றை அவர் உடனுக்குடன் நிறைவேற்றியும் தருகிறார் என்று மெய்சிலிர்க்க சொல்கின்றனர். நினைத்தது நடந்ததும் குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மீண்டும் ஏரிக்கரைக்கு வருகிறார்கள். ஆடு வெட்டி விருந்தாக்கி மதுவோடு மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். இப்படி அடிக்கடி விருந்துகள் நடக்கிறது.
கிராமத்து மக்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, முனியப்பன் முன்பு வேல்களை நட்டு வைத்து கும்பிடுகிறார்கள். காதலை நிறைவேற்ற கோரி இளைஞர்களும், இளம்பெண்களும் இங்கு வழிபடுவது சுவாரஸ்யமான விஷயம். தன் மனம் கவர்ந்தவன் அல்லது கவர்ந்தவளின் பெயரை துண்டு சீட்டில் எழுதி, அதோடு அவர்களின் தலைமுடி சிறிது, நகத்தை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து வந்து அதையும் சீட்டில் வைத்து பொட்டலமாக சுருட்டி மரங்களில் ஆணி அடித்து வைக்கின்றனர். உண்மையான அன்போடு வேண்டுபவர்களின் காதலை சேர்த்து வைக்காமல் விட்டதே இல்லையாம் வாரடி முனியப்ப சாமி. இதனால் காதல் கனவுகளோடு பலர் வந்து மனமுருக வேண்டுகிறார்கள். கோயில் மரங்களில் ஏராளமான துண்டு சீட்டுகளை பார்க்க முடிகிறது. அதோடு முனியப்பனின் அருளுக்கு சாட்சியாக பலர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறுகின்றனர்.
‘‘நீண்ட காலமா காதலிச்சு வந்தோம். ரெண்டு வீட்லயும் கடும் எதிர்ப்பு. இனிமே ஒருத்தரை ஒருத்தர் பார்க்க கூடாதுனு மிரட்டுனாங்க. எங்க காதல் அதோட முடிஞ்சிடுச்சினு பயந்தேன். அப்பதான் வாரடி முனி பத்தி கேள்விப்பட்டு இங்கே வந்தேன். ‘என் காதலிய எப்படியாச்சும் என்கூட சேத்து வையி’னு மனசார வேண்டிக்கிட்டு துண்டு சீட்டுல எழுதி வச்சேன். எங்க கோரிக்கையை வாரடி முனி ஏத்துக்கிட்டாரு. எங்கள் காதல் கைகூடிச்சு. இப்ப கணவன் - மனைவியா கோயிலுக்கு வந்திருக்கோம்’’ என்று நெகிழ்கிறார் மேட்டுப்பட்டியை சேர்ந்த இளைஞர். வாரடி முனியின் சக்திக்கு சாட்சியாக ஏராளமான இளம்தம்பதிகள் கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவதை பார்க்க முடிகிறது. - நாச்சிபாளையம் பூபதி
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook