ஊருக்கு ஒரு விசித்திரமான கதை இருக்கும். பழங்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்றாலும் இன்றைக்கும் அதை நினைத்து மக்கள் பீதியில் உறைந்து கிடப்பதுண்டு. அப்படித்தான், ஆலச்சம்பாளையம் மக்களும் பெண் சிசுக்களின் உயிர் குடிக்கும் மர்ம கிணற்றையும், பேய் ஓட்டும் முனியப்ப சாமியையும் இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிராக பார்க்கின்றனர். பெண் சிசுக்களை பலி வாங்கிய மர்மக் கிணறு, பேய் ஓட்டும் பீடம், பெண்களின் தலைமுடி முடிந்து வைத்த ஆளுயர வேல்கள், ரத்தக்கறை படிந்த குண்டக்கல் பாறை... இப்படி பல மர்மங்களை கொண்டிருக்கிறது மோலானி முனியப்ப சாமி கோயில். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலச்சம்பாளையம். இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள், குண்டல்காரை பாறை பகுதியில் ஆக்ரோஷமாக அமர்ந்திருக்கிறார் மோலானி முனியப்பன் சாமி. வதம் செய்யும் கோலத்தில் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கும் இந்த சாமி செவ்வந்தி பூ என்றால் ரொம்ப இஷ்டமாம். அதனால், சாமிக்கு செவ்வந்தி மாலைகளையே பக்தர்கள் அதிகம் சாட்டுகின்றனர். முனியப்பன் சாமியின் எதிரே 20 அடியில் இருந்து 120 அடி வரை பலவித வடிவங்களில் வேல்களை வேண்டுதலுக்காக பக்தர்கள் நட்டு வைத்துள்ளனர். இந்த கோயில் அருகே 2 பெரிய பாறைகளுக்கு நடுவே செடி, கொடிகள் மண்டிய கிணறு உள்ளது. அருகில் மற்றொரு கிணறும் இருக்கிறது. இந்த கிணறுகளின் வரலாறுதான் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. செடி, கொடிகள் மண்டிக் கிடக்கும் கிணற்றுக்கு ‘புள்ள துருத்தி கிணறு’ என்று பெயராம். கோயிலைச் சுற்றிலும் ஆலச்சம்பாளையம், மலங்காடு, குள்ளம்பட்டி, வெள்ளக்கரடு, காட்டூர், மேட்டுத் தெரு, ஏரி ரோடு, உள்பட 70-க்கும் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் பெண் குழந்தை பிறந்தால், உடனே அந்த சிசுவை கல்லைக்கட்டி கிணற்றுக்குள் போட்டு விடுவார்களாம். கிணற்று தண்ணீரில் மூழ்கும் சிசு, கல்லின் பாரத்தில் தண்ணீருக்கு அடியில் சென்று தரையை அடைந்துவிடும். மேலே வராது. சிறிது நாட்களில் அந்த சிசுவின் சடலத்தை மீன்கள் அரித்து தின்றுவிடும். குடும்பத்துக்கு ஆகாத தலைச்சன் சிசுக்களையும் இதேபோல கிணற்றுக்குள் போட்டு விடுவார்களாம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. இப்போது யாரும் கிணற்று பக்கம் போவதில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த பழக்கம் தற்போது இல்லை என்றாலும், மரணக் கிணறின் மர்மம் மட்டும் ஊருக்குள் பீதியை கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கு பேய், காத்து கருப்பு பிடித்திருந்தால் கோயில் முன்பு உட்கார வைத்து அங்குள்ள மணியை பலமாக அடிப்பார்கள். அப்போது பேய் பிடித்த பெண், ஆவேசமாக ஆடுவார். பின்னர் அவரை அங்கு நட்டு வைத்துள்ள வேல் முன்பு உட்கார வைத்து கற்பூரத்தை கொளுத்துவார்கள். கற்பூர வெளிச்சம், கோயில் மணி ஓசை மற்றும் முனியப்ப சாமி அருளால் பேய் ஓடிப் போய் விடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இப்போதும் இப்படிப்பட்ட சம்பிரதாயத்தை அரங்கேற்றி வருகின்றனர். பேய் பிடித்த பெண்ணின் தலையில் இருந்து சிறிது முடியை பிய்த்து வேலின் கூரான பகுதியில் வளைக்கப்பட்ட கம்பியில் சுற்றி கட்டி விடுவர். அப்படி செய்தால் முனியப்பனிடம் பேய் சரண் அடைந்துவிட்டதாக அர்த்தம் என்கின்றனர் கிராம மக்கள். யாருக்காவது நேரம் சரியில்லை, தோஷம் தாங்கி நோயில் முடங்கி விட்டால் நள்ளிரவில் முனியப்பன் கோயிலுக்கு வருவார். அங்கு ‘சாங்கியம்’ கழித்து மிளகாய் கரைசலை முச்சந்தி ரோட்டில் ஊற்றி விடுவார். கூடவே தேங்காய், அறுக்கப்பட்ட எலுமிச்சை பழம், குங்குமம் ஆகியவற்றையும் போட்டு, கற்பூரத்தை கொளுத்திவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு செல்ல வேண்டும். இப்படி செய்தால் தோஷம் கழியும், செய்வினை விலகும், நோய் அகலும் என்று நம்புகின்றனர். ஆடி மாதம் வெகுவிமரிசையாக கோயிலில் திருவிழா நடக்கும். பெரும்பாலும் ஆடு, கோழி பலியிடப்படும். சில நாட்களுக்கு முன்பு ரத்தப்பாறையில் 2,500 ஆடுகளை பலியிட்டுள்ளனர். 5 ஆயிரம் கோழிகளை உயிரோடு அறுத்துள்ளனர். அவற்றின் ரத்தத்தை பாறைகளில் பூசி விட்டு சென்றனர். பாறைகளில் வைத்துதான் ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். அதனால் அந்தப் பாறையே ரத்தப் பாறையாக காட்சியளிக்கிறது. இதை குண்டக்கல் பாறை என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். ‘‘இது மகா சக்தி வாய்ந்த முனியப்ப சாமிங்க. ஆடி மாசம் வியாழக்கிழம முனியப்பனுக்கு கெடா வெட்டி படையல் போடுறோம். அமாவாசை அன்னிக்கு ஜனங்க வந்து அவுங்கவுங்க குறைய சொல்லி நேந்துக்குவாங்க. நெனச்சது நடத்துட்டா, நேர்த்திக்கடனா வேல் வாங்கி வந்து நடுவாங்க’’ என்கிறார் கோயில் பூசாரி நாராயணன். இடைப்பாடி அருகே அடர்ந்த காட்டுப்புறத்தில் கம்பீரமாக வீற்றிருந்து, காக்கும் முனியப்பன் சாமியை தேடி பக்தர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, அமாவாசை, ஆடி மாதங்களில் இப்போதும் படையெடுத்து கொண்டு தான் இருக்கின்றனர்.!
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook