தமிழக வங்கிகளில் மட்டும் ரூ1300 கோடி டெபாசிட் - இரண்டு நாளில் குவிந்தது
சென்னை, - தமிழகத்தில் 2 நாளில் வங்கிகளில் ரூ.1300 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, சென்னையில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியதாவது: தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பணம் எடுத்துள்ளனர். நூறு ரூபாய் நோட்டுகளே அதிகம் எடுக்கப்பட்டதால், அவை சீக்கிரமே முடிந்து விட்டன. இதனால்தான், ஏ.டி.எம். மையங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலைமை அடுத்த வாரம் சீராகி விடும். அடுத்த வாரம் முதல், ஏ.டி.எம். மையங்களில் பிரச்னை இல்லாமல் அனுமதிக்கப்பட்ட தொகையை பெறலாம். இன்றும், நாளையும் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் இயங்கும். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் கடந்த 2 நாட்களில் மூவாயிரம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் மக்கள் வங்கிகளில் 1,300 கோடி ரூபாய் தொகையை டெபாசிட் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.