சென்னை நகரில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சென்ட்ரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே, அண்ணாசாலை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் கார்னர், தி.நகர், புரசைவாக்கம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அடையாறு எல்பி ரோடு, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு, ஆங்காங்கே தற்காலிக போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டன.
அந்த போலீஸ் பூத்துகளில் போலீசாருக்கு உதவி செய்வதற்காக மைக்செட் மற்றும் பல்வேறு தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த பூத்துகள் அமைக்கப்பட்ட ஒருசில நாட்களுக்கு மட்டும் போலீசார் முறையாக பயன்படுத்தினர். இதைத் தொடர்ந்து, கோடை மற்றும் மழைக் காலங்களில் இந்த போலீஸ் பூத்துகளில் நின்றபடி போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று போக்குவரத்து போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இந்த போலீஸ் பூத்துகள் அனைத்தும் தற்போது போலீசாரால் பயன்படுத்தப்படாமல், அந்தந்த சாலைகளின் ஓரத்தில் குப்பைத் தொட்டியாகப் போடப்பட்டு உள்ளது. போலீசாரால் பயன்படுத்தாத போலீஸ் பூத்துகள், தற்போது இரவு நேரங்களில் குப்பை பொறுக்குபவர்கள் மற்றும் குடிமகன்களுக்கு தஞ்சமளிக்கும் பகுதியாக மாறிவிட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வெயில் மற்றும் மழைக் காலங்களில் போலீசாரை பாதுகாக்கும் விதமாக, தி.நகரில் பாண்டிபஜார், அடையாறு கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.சி வசதியுடன் கூடிய போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டன. இந்த பூத்துகள் அனைத்தும் தி.நகர், அடையாறு, மெரீனா கடற்கரை மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டது.
ஆனால், இவற்றில் பல பூத்துகளின் 4 பக்க இரும்பு கால்கள் சரியாக பொருத்தப்படவில்லை என்பதால், அவற்றில் பல உடைந்த நிலையில் பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது.உதாரணமாக, அடையாறு கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட ஏ.சி. போலீஸ் பூத்தின் 2 கால்களும் உடைந்து, அவற்றுக்கு இரண்டு கற்களை முட்டு கொடுத்து சாலையோரமாக முடங்கிய நிலையில் உள்ளது.இதேபோல் சென்னை திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், பெசன்ட்நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், நெசப்பாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இருக்கும் போலீஸ் பூத்துகள் சரிந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்த பூத்துகளின் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து போலீசார் பூத்துகளில் நிற்காமல், சாலையோரமாக ஒதுங்கி, ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் மாமூல் வசூலிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பெரும்பாலான மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஒருசில போக்குவரத்து போலீசார் கூறும்போது, ‘பாண்டிபஜாரில் ஏ.சி போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பூத்துக்கான மின் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது அந்த போலீஸ் பூத் வெறும் ஷோகேஸ் பொம்மை போல் காட்சியளிக்கிறது.இதேபோல் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் பூத்துகளுக்கும் இதே அவலநிலைதான். ஏனெனில், இந்த போலீஸ் பூத்துகளுக்கு தேவையான மின் இணைப்புக்கு அந்தந்த பகுதி மின்வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும். அந்த பூத்தில் பயன்படுத்தப்படும் யூனிட் மின்சாரத்துக்கு யார் பணம் செலுத்துவது?
இதனாலேயே பெரும்பாலான இடங்களில் போலீஸ் பூத்துகள் பயன்படாத நிலையில் உள்ளது. மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படும்போது, நாங்கள் அவ்வப்போது பூத்தை விட்டு இறங்கி சென்று சமாளிப்பது மிக கஷ்டம். அதற்கு பதிலாக நாங்கள் சாலைகளிலேயே நின்று போக்குவரத்தை பராமரித்து வருகிறோம். அத்துடன் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து வருகிறோம்’ என்று அனைத்து போலீசாரும் கூலாக கூறுகின்றனர். ஒவ்வொரு இடத்தில் புதிதாக போலீஸ் பூத் அமைப்பதற்கு முன், அந்த பூத்துக்கு அடிப்படை தேவைகள் என்ன, அதன் உறுதித்தன்மை மற்றும் பயன்பாடு, மின் உபயோகத்துக்கான கட்டணம் செலுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் திட்டமிட மாட்டார்களா?அல்லது, அந்தந்த பகுதிகளில் போலீஸ் பூத் அமைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்துகிறோம் என்று கணக்கு காண்பிப்பதற்காக அவை அமைக்கப்படுகிறதா என அனைத்து தரப்பு மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு யார் விடை தருவார்கள் என்பதுதான் தெரியவில்லை.