திருச்சி, - மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகிவிட்டது. பயிர்கள் கருகியதால் இதுவரை 8 விவசாயிகள் பலியாகியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 50 டிஎம்சி தண்ணீர் தான் இருந்தது. இது போதுமானதாக இல்லை என்ற போதிலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி வாக்கில் பெய்யத்தொடங்கும். அதைக்கொண்டு சமாளித்து விடலாம் என தமிழக அரசு கருதியது.
காவிரி ெடல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர், புதுகை(ஒரு பகுதி) மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு சேதுபாவாசத்திரம், பேராவூரணி, சீர்காழி உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் 2 லட்சம் ஏக்கர் வரை இதுவரை நடவு பணியே தொடங்க வில்லை. மற்றபகுதிகளில் நேரடி விதைப்பு, நாற்று நடுதல் போன்ற பணிகள் நடந்தது.
வழக்கமாக சம்பா சாகுபடி நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்து நடப்படும். இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதால் நேரடி விதைப்பு செய்யும்படி வேளாண்மைத்துறை சிபாரிசு செய்தது. அதன்படி அதிகமான விவசாயிகள் நேரடி விதைப்பில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம் பகுதி விவசாயிகள் எப்போதும் காவிரி நீரை எதிர்பார்க்காமல் பம்ப்ஷெட் மூலமே சாகுபடியை தொடங்குவர். எனவே இப்பகுதி விவசாயிகள் மட்டும் வழக்கம் போல சாகுபடியை தொடங்கி விட்டனர். டெல்டா மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் பம்ப்செட் மூலம் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. மற்ற பகுதியில் பம்ப்செட் வசதி இல்லாத விவசாயிகள் இப்போது தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் காய்வதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவும், பயிர்கள் கருகியதால் விரக்தியடைந்தும் இதுவரை 8 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
ஒரு ஏக்கர் நிலைத்தை சாகுபடிக்கு தயார் செய்து விதை தூவி, நடவு செய்வது வரை ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு ஏற்பட்டு உள்ளது. இப்போது இந்த முதலும் போய்விட்டது. டெல்டா மாவட்டங்களில் பம்ப்செட் வசதி இல்லாத சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா பயிர்கள் கருகி விட்டன. நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். அதாவது பாசனத்திற்கு அணை மூடப்பட்டு விட்டது. கடந்த 5 ஆண்டுகளாக குறுவை மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சம்பாவும் பாதிக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
மேட்டூர் அணையும் மூடப்பட்டு, மழையும் இல்லாததால் வரும் கோடை காலத்தில் தமிழகத்தில் கடும் தண்ணீர் பிரச்னையும் ஏற்படும் நிலை உள்ளது.சம்பா பயிர் பல இடங்களில் 20 நாள் வளர்ந்துள்ள நிலையில் அணை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.