500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு பற்றி இயக்குனர்கள் ஷங்கர், சசி பாராட்டு தெரிவித்துள்ளனர்.கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடிஅறிவித்தார். இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மோடியின் நடவடிக்கையை பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றிருக்கின்றனர். இது ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமரின் நடவடிக்கையை ரஜினி, கமல் வரவேற்றுள்ளனர்.
ரஜினி நடித்த சிவாஜி படத்தில் 500, 1000 நோட்டுகள் ஒழித்தால் கருப்புபணம் ஒழியும் என்ற காட்சியை இயக்குனர் ஷங்கர் அமைத்திருந்தார். அதேபோன்ற காட்சியை விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் இயக்குனர் சசி அமைத்திருந்தார். சினிமா காட்சிகள் நிஜமானது பற்றி இரு இயக்குனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஷங்கர் வெளியிட்டுள்ள மெசேஜில்,’அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன். கனவுகள் நனவாகின்றன. ஹாட்ஸ் ஆஃப் டு நரேந்திர மோடிஜி’ என குறிப்பிட்டுள்ளார்.
பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற 500, 1000 நோட்டு ஒழிப்பு காட்சி பற்றி சசி கூறும்போது,’பொருளாதாரம்பற்றி பிச்சைக்கார கதாபாத்திரம் பேசுவது ரசிக்கும்படி இருக்கும் என்று எண்ணி இக்காட்சி வைக்கப்பட்டது. இந்த ஐடியாவை உதவி இயக்குனர் ஒருவர் சொன்னார். 2013ம் ஆண்டு இதை சந்திரபாபுநாயுடு முன்மொழிந்திருந்தார். முதலில் படத்திலிருந்து இந்த காட்சி நீக்கப்பட்டிருந்தது. எடிட்டிங்கின்போது கூடுதல் காட்சியாக மீண்டும் சேர்க்கப்பட்டது. இதை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று உறுதியாக நம்பினேன்’ என்றார்.