நெல்லை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை : அண்ணன் வெறிச்செயல்
6/27/2016 2:55:51 PM
நாங்குநேரி: நெல்லை அருகே கல்லூரி மாணவியை அண்ணனே வெட்டிக்கொலை செய்துள்ளார்.நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மேல மூன்றடைப்பைச்சேர்ந்தவர் கணேசன் என்ற சிதம்பரம்(50) அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி(42). இவர்களது மகன்கள் கிருஷ்ணராஜா(25), செல்வம்(23), மகள் மாலா(22).இதில் கிருஷ்ணராஜா சென்னை வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் வேலை பார்க்கிறார். மாலா பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்தார். மாலா நெல்லை புது பஸ் நிலையத்தில் பஸ் ஏறும்போது அங்குள்ள பழக்கடையில் அடிக்கடி ஜூஸ் குடிப்பாராம். அப்போது அந்த கடையில் வேலைபார்த்த சார்லஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு மனைவி, 2குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் காதல் விவகாரம் மாலா வீட்டிற்கு தெரியவந்ததும் மகளை கண்டித்துள்ளனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன் மேலப்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாலா, அங்கு செல்லவில்லை.இதுபற்றி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் காதல் ஜோடி கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மூன்றடைப்பு போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேசினர். போலீசாரின் அறிவுரைப்படி மாலா பெற்றோருடன் சென்றார். சார்லசை மனைவி அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், கிருஷ்ணராஜா லீவில் சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். தனது தங்கை காதல் விவகாரம் தெரியவந்ததால் மாலாவை உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். தனக்கு திருமணம் வேண்டாம் என்று மாலா கூறினார். இதன் காரணமாக கிருஷ்ணராஜாவிற்கும் மாலாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜா, வீட்டில் கிடந்த அரிவாளால் மாலாவை வெட்டிவிட்டார். படுகாயம் அடைந்த மாலாவை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் மாலா இறந்தார்.இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணராஜாவை தேடி வருகின்றனர்.