அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு
2/27/2021 5:15:27 PM
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை இன்று காலை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அதிமுகவில் கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சரத்குமார் அறிவித்தார். கூட்டணியில் இருந்து விலகியதையடுத்து அவர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரடியாக சென்று சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகிறார். அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 15 நிமிடமாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
சந்திப்பிற்கு பிறகு சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் நல்லவர்களும், ஒருமித்த கருத்துடையவர்களும், ஒருமித்த எண்ணங்கள் உடையவர்களும் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இன்று கமல்ஹாசனை நேரடியாக சந்தித்தேன். அவரின் கருத்துக்களை கேட்டறிந்தேன். அவரின் கருத்துக்களை தெளிவாக புரிந்துவைத்துள்ளேன். இனிமேல் எப்படி இதை எடுத்துச்செல்வது என்பது குறித்து அவரை சார்ந்த பொறுப்பாளர்கள் அமர்ந்து பேச உள்ளார்கள். ஒரு நல்ல முடிவு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 10 ஆண்டுகளாக நான் அதிமுக கூட்டணியுடன் இணைந்து பயணம் செய்தேன். இதனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் அழைத்து பேசுவார்கள் என்று காத்திருந்தோம். எந்த பேச்சுவார்த்தையும் இல்லாத காரணத்தால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். ஒரு முடிவை கையில் எடுத்து நேற்றில் இருந்து ஒரு புதிய முயற்சியை தொடங்கி உள்ளோம். தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இயக்கும். இவ்வாறு கூறினார்.
நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ‘தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே உள்ளது. குறுகிய கால அவகாசம்தான் இருக்கிறது என்றாலும் தேர்தலுக்கு நாங்கள் ஆயத்தமாகவே இருக்கிறோம். முதுபெரும் அரசியல் செயற்பாட்டாளர் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் வருகிற தேர்தலில் போட்டியிடுவார். மார்ச் 1ம் தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. எனது தலைமையிலான குழுவினர் தேர்வு செய்கிறார்கள். 7ம் தேதி முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். வருகிற 3ந் தேதி முதல் நான் மீண்டும் பிரசாரம் தொடங்குகிறேன். நான்தான் முதல்வர் வேட்பாளர் என்பது மக்கள் நீதிமய்யத்தின் முடிவு. கலைஞரை பற்றி நான் தவறாக பேசியதாக அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது. நான் பேசியது தவறாக திரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தில் பல கட்சிகள் இணையலாம். ஆனால் நாங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தேர்தல் செலவுக்கு நாங்களும் நிதி திரட்டுவோம்’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.