தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
1/27/2021 6:14:48 PM
சென்னை: தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.சென்னை, மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க சுமார் ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அன்றைய தினத்தில் இருந்து இரவு, பகலாக கட்டுமான பணிகள் நடந்து வந்தது. ஜெயலலிதா நினைவிடம், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கும் பணிகள் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறந்து வைத்ததற்கான கல்வெட்டையும் முதல்வர் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதுவரை அமைச்சர்கள் யாரும் உள்ளே அனுமதிக்காமல், இரும்பு தடுப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தனர். முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்திய பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக இரும்பு தடுப்பை தாண்டி வந்து ஜெயலலிதா சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தை அனைவரும் சுற்றி பார்த்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்று அதிகாலை 6 முதலே சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் குவிந்தனர். அவர்களை ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடத்துக்குள் அனுமதிக்கவில்லை. காமராஜர் சாலையில் இருந்தபடியே விழா நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு வசதியாக ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள எழிலகம் பகுதியை சுற்றி 20க்கும் மேற்பட்ட பெரிய எல்இடி டி.வி. மூலம் தொண்டர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா நினைவிடம் அருகே, அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ரூ.12 கோடியும், நினைவிடத்தின் 5 ஆண்டு பராமரிப்பு பணிக்கு ரூ.9 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அவரது வீடியோ மற்றும் ஆடியோ பேச்சின் பதிவு, அவர் படித்த நூல்கள், அவரது சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்படுகிறது.
இதில், ஜெயலலிதா பேசுவது போன்று தொடு திரை மூலம் ஒளி, ஒலி காட்சிகள் வைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம், அறிவுசார் மையம் முழுக்க, முழுக்க ஏசி வசதி செய்யப்படுகிறது. தற்போது இந்த பணிகள் முடிவடையாததால், பிப்ரவரி மாதம் திறந்து திறந்து வைக்கப்பட உள்ளது.
மாஸ்க், சமூக இடைவெளி இல்லை
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் மாஸ்க் அணியவில்லை. சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவறை வசதி செய்யப்பட்டிருந்தது. ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள சாலையில் தலைமை செயலகம், எழிலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், குடிநீர் வாரியம் என பல கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் இன்று காலை வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.
தனியார் ஊழியர்களும் காமராஜர் சாலையை பயன்படுத்த முடியாமல் சென்னையின் பல பகுதிகளுக்கு சுற்றி செல்ல வேண்டியதிருந்தது. வெளியூரில் இருந்து அதிமுகவினர் வந்த வாகனங்களை நிறுத்த போலீசார் போதிய முன்னேற்பாடுகள் செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். அதிமுக தொண்டர்கள் இரும்பு பேரிகாடை தூக்கி எறிந்து உள்ளே செல்ல முயன்றனர். ஆளுங்கட்சி தொண்டர்கள் என்பதால் போலீசாரால் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. கூட்டநெரிசலில் சிக்கி ஒருவர் மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல பல மணி நேரம் ஆனது.
சிறப்பு அம்சங்கள்
* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் அமைந்துள்ளது.
* நினைவு மண்டபம் ஐஐடி மூலம் பீனிக்ஸ் பறவையின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கீரிட் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
* 8555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
* அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
* பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும் தரை பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.
* நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
* நினைவிட வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரை கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
* நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
* பார்வையாளர்களை கவரும் வண்ணம் நீர் தடாகங்கள் சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
* நினைவிடத்தை அழகுபடுத்தும் வகையில் சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன.
* தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
* நினைவிடத்தின் இரு புற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருற்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டுள்ளது.
* மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள், காண்காணிப்பு கேமிரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,
* ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது.