5 முதலாளிகளுக்கு மட்டுமே மோடி ஆதரவு; தமிழக மக்களை பற்றி பாஜவுக்கு அக்கறையில்லை: கரூரில் ராகுல் காந்தி தாக்கு
1/25/2021 5:04:55 PM
கரூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கரூரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். க.பரமத்தியில் அவர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை குலைக்கவே பிரதமர் மோடி ஜிஎஸ்டி கொண்டு வந்தார். 5 முதலாளிகளுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருகிறார். அவரது இந்த நடவடிக்கையால்தான் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மோடி 3 கருப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டது. படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இதற்கு காரணம் நாட்டை ஆளும் பிரதமர் மோடிதான். பாஜக, ஆர்எஸ்எஸ்சுக்கு தமிழக மக்களை பற்றி கவலை கிடையாது.
ஒரு தேசம், ஒரு மொழி என்பதில் மோடி என்ன சொல்ல வருகிறார்? ஏன் தமிழ்மொழி என்பது மொழி கிடையாதா? தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாகும் என்பதை ஏன் நினைவில் கொள்ளவில்லை. மோடி, அதிமுகவையும், அமைச்சர்களையும், மிரட்டுகிறார். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் பொதுமக்கள் பயந்துவிட மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் மனதோடு பேசும் நிகழ்ச்சியை நடத்துகிறார். அதை யாரும் விரும்பி பார்ப்பதில்லை. சரியான அரசாங்கத்தை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து, வாங்கல் மாரிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து, அவர் கலந்துரையாடினார்.
இன்று மாலை 3 மணியளவில் அரவக்குறிச்சி ஏவிஎம் கார்னர் மற்றும் பள்ளப்பட்டி ஷா கார்னர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து பேசுகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆற்றுமேடு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராகுல்காந்தி, மாலை திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், மதுரை செல்லும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ராகுலுக்கு கறி விருந்து
கரூர் திண்டுக்கல் சாலை அரவக்குறிச்சி அருகே ஐந்து ரோடு பகுதியில் உள்ள மலைக்கோவிலூர் மண்பானை சமையல் உணவகத்தில் ராகுல் காந்திக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நாட்டுக்கோழியில் தயாரான உப்புக்கறி, நாட்டுக்கோழி சுக்கா, வஞ்சிரம் மீன், நண்டு, முட்டை கிரேவி, சாதம், சிக்கன் குழம்பு மற்றும் தயிர், ரசம், நாட்டுசர்க்கரை பருப்பு பாயாசம், கற்பூரவல்லி பழம், ஆகியவைகளை தயார் செய்திருந்தனர்.