மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு
1/23/2021 5:00:51 PM
புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நடந்த ஆலோசனையின்படி வரும் மே 29ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததையடுத்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். பல மாநில பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்த நிலையில், கட்சின் உள்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்தவும், கட்சிக்கு தலைவரை தேர்ந்தெடுக்கவும், கட்சியின் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்த வேண்டும் என்றும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர் வலியுறுத்தி வந்தனர்.
இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் காணொலி வாயிலாக கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலை நடத்தி வரும் ஜூன் மாதத்துக்குள் கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம். தேர்தல் நடத்துவது தொடர்பாக கட்சிக்குள் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை’ என்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மே மாதம் 29ம் தேதி நடத்துவது என்று செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், தேர்தல் தேதியை முடிவெடுக்கும் இறுதி அதிகாரத்தை சோனியா காந்திக்கு கட்சியின் செயற்குழு வழங்கியது. முன்னதாக 23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய குழு கடந்த ஆண்டு ஆகஸ்டில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய போது, முழுநேர கட்சித் தலைவர் தேவை என்று கூறியது. அதன் தொடர்ச்சியாக தற்காலிகமாக சோனியா காந்தி இடைக்கால தலைவர் ெபாறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.