குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு
10/18/2020 6:36:09 PM
தண்டையார்பேட்டை: குடும்ப பிரச்னையில் உறவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை ராயபுரம் மேற்கு மாதாகோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4வது மாடியில் வசித்துவருபவர் இப்ராகிம்ஷா (57). இவர் மண்ணடி அங்குமுத்து தெருவில் ஓட்டல் நடத்துகிறார். இவரின் மனைவி பரகத்நிஷா (47). குடும்ப பிரச்னை காரணமாக தம்பதி இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த இப்ராகிம்ஷா, அந்த பகுதியில் வசித்துவரும் தனது மனைவியின் அக்கா மகன் அசாருதீன் (27) என்பவருக்கு போனில் பேசி நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பரகத்நிஷாவுக்கு ஆதரவாக அசாருதீன் பேசியதால் போனிலேயே இருவருக்கும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசாருதீன், நேரில் வந்து பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து நேற்று இரவு 10.30 மணி அளவில் இப்கிராம்ஷா வீட்டுக்கு அசாருதீன் வந்துள்ளார். அப்போது, பாத்ரூமில் மறைந்திருந்த இப்ராகிம்ஷா, அருகில் வந்தால் துப்பாக்கியால்சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இருப்பினும் அவற்றை பொருட்படுத்மல் பாத்ரூம் அருகே அசாருதீன் சென்றபோது அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரி சுட்டுள்ளார்.
இதில் அசாருதீனின் இடது உள்ளங்கையில் குண்டுபாய்ந்து ரத்தம் கொட்டியது. இதனால் 4வது மாடியில் இருந்து அலறியபடி அசாருதீன் கீழே ஓடிவந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் நின்றிருந்த அசாருதீனை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். துப்பாக்கியால் சுட்டதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக இப்கிராம்ஷாவின் இடதுகையில் கண்ணாடி துகள்கள் குத்தி படுகாயம் ஏற்பட்டிருந்ததால் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இப்ராகிம்ஷாவின் மனைவியிடம் விசாரித்தனர். ’மாடியில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. வேறு எதுவும் எனக்கு தெரியாது’ என்றார்.
இதையடுத்து இப்ராகிம்ஷாவின் வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 8 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.