‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்
10/18/2020 6:27:32 PM
பெரம்பூர்: ‘’பழிதீர்க்க வக்கீலை கொன்றோம். இன்னும் பலரை கொல்வோம்’’ என்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பிவி.காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (45). இவர் வக்கீலாக பணியாற்றினார். இவரின் மனைவி ரம்யா (38). இவர் மக்கள் ஆளும் அரசியல் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். இதில் வக்கீல் ராஜேஷ் ஆலோசகராக இருந்தார். கடந்த 4ம்தேதி இரவு வில்லிவாக்கம் எம்டிஎச். சாலை கள்ளுக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராஜேஷை 8 பேர் மறித்து சரமாரி வெட்டிக்கொன்றனர். அவர்களை தேடி வந்த நிலையில், கொலை குற்றவாளிகள் 8 பேர், வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். வக்கீல் ராஜேஷ் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கொன்றிருக்கலாம் என்ற கோணங்களில் போலீசார் விசாரணை துவக்கினர். பல கட்ட விசாரணை நடத்தியும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து, சரணடைந்த 8 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதில் கிடைத்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வருமாறு; வியாசர்பாடி பிவி காலனியில் 2 கோஷ்டிகள் செயல்பட்டு வந்தன. சூழ்ச்சி சுரேஷ், முருகேசன் ஒரு அணியாகவும் பிரபல ரவுடி சேராவின் மகன் கதிரவன் மற்றும் தொப்பை கணேஷ் ஆகியோர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். பிவி. காலனி பகுதியில் யார் பெரிய ரவுடி என்பது நிரூபிக்க இரண்டு தரப்புக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களிடையே தொழில் போட்டியும் இருந்துள்ளது.
இதன் காரணமாக சூழ்ச்சி சுரேஷ் தரப்பை சேர்ந்த இடிமுரசு இளங்கோ கடந்த 2013ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதே கோஷ்டியை சேர்ந்த பழனி என்பவர் கடந்த 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு திவாகர் கொல்லப் பட்டார். இவர்களை பிரபல ரவுடி சேராவின் மகன் கதிரவன், தொப்பை கணேஷ் ஆகியோர்தான் கொலை செய்தனர் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிராக சூழ்ச்சி சுரேஷ், முருகேசன் ஆகியோர் சேர்ந்து 2013ம் ஆண்டு முத்து பாட்ஷா மற்றும் 2014 ம் ஆண்டு ஜப்பான் சரவணன், 2017ம் ஆண்டு சாலமன் மற்றும் சீனிவாசன் ஆகியோரை கொலை செய்து பழிதீர்த்துக்கொண்டனர்.
இதுசம்பந்தமாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வக்கீல் ராஜேஷை ஏற்கனவே கொல்ல முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் முருகேசன் என்பவரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். முருகேசன் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் ராஜேஷை அப்போதே கொலை செய்திருப்போம் என்று முருகேசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட வக்கீல் ராஜேஷ், கதிரவன் மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவருக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். அத்துடன் கதிரவனுடன் சேர்ந்து கட்ட பஞ்சாயத்து செய்துவந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக வியாசர்பாடி பகுதிகளில் சூழ்ச்சி சுரேஷ், முருகேசன் ஆகியோரின் செல்வாக்கு படிப்படியாக குறைந்துள்ளது. இனியும் வக்கீல் ராஜேஷை விட்டுவைத்தால் நம்மால் வியாசர்பாடி பகுதியில் மாஸாக சுற்றிவரமுடியாது என்று கொலை செய்ய திட்டமிட்டு, வக்கீல் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த திட்டத்தை அரங்கேற்றுவதற்காக கடந்த 4ம் தேதியில் இருந்தே ராஜேஷை பின் தொடர்ந்துள்ளனர். செப்டம்பர் 19ம் தேதி, ராஜேஷ் பிறந்தநாள் என்பதால் அன்று அவரை கொல்ல முயற்சி செய்தனர். அன்றைய தினம் அவருடன் நண்பர்கள் அதிகம் இருந்ததால் அந்த பிளான் தோல்வி அடைந்தது. இதனிடையே ராஜேஷ் கொலை செய்யப்பட்ட அன்று விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க வியாசர்பாடி பகுதிக்கு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வில்லிவாக்கத்தில் சுற்றிவளைத்து ராஜேஷை தீர்த்துக்கட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முருகேசன், எதிர் கோஷ்டியால் கொல்லப்பட்ட பழனியின் நெருங்கிய நண்பர். இதனால் பழனி கொல்லப்பட்டதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன்காரணமாகத்தான் வக்கீல் ராஜேஷை கொன்றோம். இத்துடன் விட்டுவிட மாட்டோம். இதற்கு மூளையாக செயல்பட்ட தொப்பை கணேசன், சேராவின் மகன் கதிரவன் ஆகியோரையும் கொலை செய்வோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிவி.காலனி பகுதியில் மேலும் கொலைகள் நடைபெறலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.