2 தீவிரவாதிகள் அதிரடி கைது
9/22/2020 6:07:07 PM
திருவனந்தபுரம்: கடந்த 2014ல் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சுகைப் என்பவரை என்ஐஏ தேடி வந்தது. இதேபோல டெல்லி குண்டு வெடிப்பு மற்றும் ஹவாலா வழக்கில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது புல்நவாஸ் என்பவரையும் என்ஐஏ தேடி வந்தது. இந்த நிலையில் சுகைப் பாகிஸ்தானில் இருப்பது தெரிய வந்தது. அங்கு திருமணமும் செய்துகொண்ட அவர் வியாபாரம் செய்து வந்தார். அங்கிருந்து சுகைப் அடிக்கடி ரியாத் சென்று வருவதாக என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. இதுபோல முகமது புல்நவாஸ் ரியாத்தில் இருந்து வந்தார்.
இதையடுத்து இவர்கள் 2 பேரையும் பிடிக்க என்ஐஏ, ‘இன்டர்போல்’ உதவியை நாடியது. இதையடுத்து இன்டர்போல் விசாரணை நடத்தி, தீவிரவாதிகள் இருவரும் ரியாத்தில் இருக்கும் தகவலை என்ஐஏவுக்கு அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த இருவாரங்களுக்கு முன்பு ரியாத் சென்ற என்ஐஏ, இருவரையும் கைது செய்து நேற்று விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்து வந்தது. இந்த நிலையில் முகமது புல்நாவாஸை திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் வைத்து ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுபோல சுகைப் இரவோடு இரவாக கொச்சி என்ஐஏ அலுவலகம் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று சுகைப் பெங்களூக்கும், முகமது புல்நவாஸை டெல்லிக்கும் அழைத்து செல்கின்றனர். கைது செய்யப்பட்ட இந்த இரண்டு தீவிரவாதிகளும் ெதாடக்கத்தில் தடைசெய்யப்பட்ட ‘சிமி’ அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளனர். பின்னர் சுகைப் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிலும், முகமது புல்நவாஸ் லக்ஷர்-இ-தொய்பா இயக்கத்திலும் சேர்ந்துள்ளனர். மேலும் சுகைப் தீவிரவாத இயக்கத்துக்காக கேரளாவில் இருந்து ஹவாலா பணம் திரட்டி அனுப்பி வைத்துள்ளார்.