காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு
6/7/2020 3:03:16 PM
ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திச்சென்றது தொடர்பாக தந்தை, தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (23). இவர் கார் டிரைவர். இதே பகுதியை சேர்ந்த பெருமாளின் மகள் நித்யா (20). இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு வெங்கடாசலம், மனைவியுடன் கொடுமுடி அருகே ஏமானூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். இந்தநிலையில் காணாமல் போன மகளை அவரது பெற்றோர் தேடியபோது இருவரும் ஏமானூரில் இருப்பது தெரிய வந்தது.
கடந்த 1ம் தேதி நித்யாவின் தந்தை பெருமாள், தாயார் ஈஸ்வரி, சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் வெங்கடாசலம் தங்கிருந்த வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் நித்யாவும், வெங்கடாசலமும் இருந்த நிலையில் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 3 பேரும் நித்யாவையும், வெங்கடாசலத்தையும் தாக்கியுள்ளனர். நித்யாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, கொடுமுடி போலீசார் நித்யாவின் தந்தை பெருமாள், தாயார் ஈஸ்வரி மற்றும் சித்தப்பா சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.